வெள்ளி, 12 மே, 2017

ஆபத்தை விளைவிக்கும் அழகுசாதனப் பொருட்கள்

alakusathanabborulkal1
அழகுசாதனப் பொருட்கள்… இன்றைக்கு ஆண்கள், பெண்கள் இருபாலினரும் பயன்படுத்தும் அத்தியாவசியமான சமாசாரமாகிவிட்டன. அழகாக இருக்க எல்லோரும் ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், அழகுசாதனப் பொருட்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன… மணமூட்டுவதற்கும், நிறமேற்றுவதற்கும், அழகு சேர்க்கவும் இவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் என்னென்ன…! இவை பாதுகாப்பானவைதானா… உடல்நலத்துக்குத் தீங்கு ஏற்படுத்துபவையா…? என்பதை எல்லாம் நாம் யோசிப்பதில்லை. உலகில் இது தொடர்பாக அதிகம் ஆய்வுகளும் நடைபெறுவதில்லை என்பதுதான் உண்மை..பல அழகுசாதனப் பொருட்கள் நம் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பவை. அழகுசாதனப் பொருட்கள் என்ன செய்யும்? ஆபத்தை விளைவிக்கும் பின்னணிச் செய்திகள்… நெயில் பாலீஷ்… குழந்தைகளுக்குப் பிடித்த அழகுசாதனப் பொருள். இதில் காரீயம் கலக்கப்படுகிறது. இது, குழந்தைகளின் மூளைத் திறனையே பாதிக்கக்கூடியது. * பல மணமூட்டிகளில் (சென்ட்) உள்ள ஃபார்மால்டிஹைடு (Formaldehyde), நரம்பைப் பாதிக்கும் ஒரு நச்சுப் பொருள். * அதேபோல மணமூட்டிகள், அழகூட்டிகளில் சேர்க்கப்படும் எத்தலின் ஆக்ஸைடு (Ethylene oxide) ரசாயனம் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது. இப்படி `உலகம் எங்கும் தயாராகும் அழகுசாதனப் பொருட்களில், 22 சதவிகிதப் பொருட்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் இருக்கின்றன’ என எச்சரிக்கிறது `ஸ்கின் டீப்’ என்ற அமைப்பு. பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவம் எய்துவதற்கும், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் அழகூட்டிகளில் உள்ள ஹார்மோன்கள் காரணமாக இருக்குமோ என்கிற ரீதியிலும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. `தாலேட்’ (Phthalate) எனும் முகத்தில் மேக்கப்பை நிறுத்தும் ரசாயனம், கண் அழகுக்குப் பயன்படுத்தப்படும் பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன் (Polycyclic Hydrocarbon) ஆகியவை ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிப்பதாக அஞ்சப்படுபவை. ஆனாலும், இன்று வரை நம் சந்தையில் விற்பனையில் உள்ளவை. ஐந்து வயதேயான குழந்தைக்கு ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்து, முகத்தில் ஸ்க்ரப் செய்து, பாலீஷ் போட்டு, ஸ்ப்ரே அடித்து, காற்றுப் புகாத பளபள ஆடை அணிவித்து நடத்தும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், அந்தக் குழந்தையின் அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். * `ஆர்கானிக்’ என்கிற பெயரில் விற்கப்படும் பொருட்களிலும் எச்சரிக்கை தேவை. விற்பனை உத்திக்காக மட்டுமே பல பொருட்களில் `ஆர்கானிக்’ என்கிற வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது. மூலிகை ஷாம்பூக்களில், சோடியம் லாரல் சல்பேட் (Sodium Lauryl Sulfate) கலக்கப்படாதவை மிக மிக அரிதானவை. கொஞ்சம் ரசாயனம், சிறிது மூலிகை’ என்ற கலப்பில் வருபவைதான் அதிகம். `ஆர்கானிக் என உலக அளவில் விற்கக்கூடிய அழகூட்டிகளில் பத்து சதவிகித மூலப் பொருட்கள் மட்டுமே ஆர்கானிக்’ என்கிறது சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் `செர்டெக்’ (Certech) அமைப்பு. அதிலும், குழந்தைகளுக்காக விற்கப்படும் ஆர்கானிக் நேச்சுரல் அழகூட்டிகளில் 35 சதவிகிதம் கெமிக்கல் பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுகின்றன என்றும் இந்த அமைப்புத் தெரிவித்திருக்கிறது. `அழகுசாதனப் பொருட்கள் எல்லாம் மேலே பூசுவதற்குத்தான். அவை உடலுக்குள் செல்லாது’ என நினைக்க வேண்டாம். தாலேட் பிளாஸ்டிசைசர்ஸ் (Phthalate Plastcizers) மற்றும் பாரபென்கள் (க்ரீம்கள், ஷாம்பூக்கள் போன்ற அழகுசாதனப் பொருட்கள் கெடாமல் இருக்க சேர்க்கப்படும் பிரிசர்வேட்டிவ்), அதோடு நிறமூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் நானோ துகள்கள் ஆகியவை உடலுக்குள் உறிஞ்சப்படுவது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் சில மணமூட்டிகளும், சன் ஸ்கிரீனர்களும் விந்தணுக்களின் எண்ணிக்கையைக்கூடக் குறைக்குமாம் . அதிகமாக உடலுக்கு ஸ்ப்ரே அடித்துக்கொள்ளும் ஆண்கள் அதைத் தவிர்க்கவும். சன் ஸ்கிரீன் பூசித் திரிபவர்களுக்கு, வைட்டமின் டி குறைபாடும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகும். கறுப்பாக இருப்பவர்களை கேலி செய்வதும், இழிவாகப் பார்ப்பதும் அறியாதவர்கள் செய்யும் வேலை. குழந்தைகளுக்கு கறுப்பு என்கிற அழகை ரசிக்கவிடாமல், பௌடர் போட்டு, க்ரீம் பூசி வளர்ப்பது, சிறு வயதிலேயே கறுப்பு நல்லதில்லையோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். கறுப்பு அழகு, ஆரோக்கியம் என்பதை குழந்தைப் பருவம் முதலே விதைக்கவேண்டியிருக்கிறது. அழகு என்பது வெறும் வெளித்தோற்றம் மட்டுமல்ல. குழந்தையின் பாசம், கணவரின் கரிசனம், அம்மாவின் பரிவு, காதலியின் அன்பு எல்லாமே அழகுதான். எனவே அழகுசாதனப் பொருட்கள் விளைவிக்கும் தீங்குகளைப் புரிந்துகொள்வோம். இயற்கையே அழகு என்பதையும் அறிந்துகொள்வோம். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> alakusathanabborulkal alakusathanabborulkal1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Blogger Templates