வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களை சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்வதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. இவர்களுக்கான நேர்முகத் தேர்வு அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெற்று, ஜூலை மாதம் நியமனம் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலக வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக தொண்டர்களாகப் பணியாற்றும் ஆசிரியர்களை நிரந்தரமாக்கும் முயற்சிகளை மாகாண கல்வி அமைச்சு மேற்கொண்டிருந்தது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் இரு முறைகள் சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டிருந்தது. தற்போது மட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனைகளுடன் அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டிற்கு முன்பு 3 வருடத்தினை சேவைக்காலம் கொண்ட ஆசிரியர்களை மட்டுமே உள்வாங்க முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு நியமனம் வழங்கிய காலத்தில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்த 67 பேரும் உரிய
கல்வித் தகமையினைக் கொண்டிருப்பின் அவர்களிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
2013 ஆம் ஆண்டிற்கு முன்னராக சேவைக்காலம், தொடர்ச்சியாக அனுமதிக்கப்பட்ட விடுமுறைகளிற்கு மேற்படாது சேவையாற்றியவர்களாக இருத்தல் வேண்டும். இவ்வாறான தேர்வுகளின் பிரகாரம் இன்று வரையில் பாடசாலைகளில் பணியாற்றுபவர்களாகவும்
இருத்தல் வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்கள் பரீட்சிக்கப்பட்டு அதில் உள்ள தகமைகளையும், காலத்தினையும் தகுதியினையும் கொண்டவர்களிற்கு நியமனத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வட மாகாணத்தில் உள்ள தொண்டராசிரியர்களிடம் ஒப்பந்த ஆசிரியர்கள் சிலரும் இதில் உள்ளடங்குவதாகவும் இவர்களில் 645 பேரே மேற்படி தகமைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் நிலையில் இருப்பதாக கொழும்பு கல்வி அமைச்சின் பரிந்துரையில் சிபார்சு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் அடுத்த மாதம் இதற்கான நேர்முகத் தேர்வுகள் இடம்பெறவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக